தலைப்பு செய்திகள்
for more news click here for more news click here

ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களின் ஓயாத போராட்டம்

Naam tamillar News

வாடிவாசல் திறந்தால் ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கி விடலாம். ஆனால் மெரீனா போர்க்களத்தில் நிற்கும் காளைகளை அடக்குவது அவ்வளவு எளிதானது அல்ல.

இது உரிமைக்காக அடங்க மறுக்கும் காளையர்கள் கூட்டம் என்றாலும் எள் அளவும் அத்துமீறாத அற்புதமான காளையர்கள்.

போராட்ட களம் புகுந்து இன்று (ஞாயிறு) நாட்கள் ஆறு ஆகி விட்டது. ஆனாலும் ஆறவில்லை அவர்களது சினம்.

எப்படியாவது அடக்கியே தீர வேண்டும் என்று தவித்து கொண்டிருக்கும் ஆட்சியாளர்கள் அவசர சட்டம் வந்தால் போர்க்களத்தில் அமைதி பூக்கள் பூத்து விடும் என்று எதிர்பார்த்தனர். நம்பினார்கள்.

அவர்களது இந்த எதிர்பார்ப்பு தவிடுபொடியாகி விட்டது. முன் வைத்த காலை பின் வைக்கப்போவதில்லை என்று காளையர் கூட்டம் உறுதியாக உள்ளது.

அவசர சட்டம் வரும், அதற்கு தடையும் வரும் என்று அனுபவ பாடத்தை எல்லாம் ஏற்கனவே படித்து விட்டோம். நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை இங்கிருந்து எழ மாட்டோம் என்ற திட்டவட்டமான அறிவிப்புடன் இளைஞர்கள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.

போராட்டக்களத்தில் இத்தனை லட்சம் பேர் குவிந்தார்கள் என்பதெல்லாம் வெறும் கணக்குதான். ஒவ்வொரு நாளும் பல லட்சம் பேரை போராட்டக்களம் சந்தித்து வருகிறது.

ஆனால் இந்த மாணவர்களின் மனக்கணக்கு என்ன? என்பதுதான் மக்கள் எதிர்பார்க்கும் கணக்காக உள்ளது.

அவசர சட்டம் வந்து விட்டது. ஜல்லிக்கட்டு தொடங்கப் போகிறது என்ற அறிவிப்பையெல்லாம் ஒரு காதில் வாங்கி இன்னொரு காதில் விட்டு விட்டு பொது மக்கள் மெரீனா போர்க்களத்தை நோக்கி நடையை கட்டினார்கள்.

இன்று மதியம் 12 மணிக்குள் திரண்டவர்கள் எண்ணிக்கை சில லட்சங்களை கடந்து அனைவரையும் மிரள வைத்துள்ளது. இதுவரை இளைஞர்கள், மாணவர்கள் மட்டுமே இந்த கூட்டத்தில் பொதுமக்கள் பகலில் மட்டுமே பார்வையாளர்களாக வந்து சென்றனர். ஆனால் நேற்றிரவு ஏராளமான பொதுமக்கள் குடும்பத்துடன் மெரீனாவில் தங்கி விட்டனர்.

கொட்டிய பனியையும் பொருட்படுத்தாமல் இரவில் கடற்கரை மணலில் படுத்து தூங்கினார்கள். பொழுது புலர்ந்ததும், குழந்தைகளுக்கு தேவையான பால் அங்கேயே அடுப்பில் கொதிக்க வைத்து கொடுக்கப்பட்டது.

குழந்தைகள் வைத்திருக்கும் பெண்களிடம் தொண்டர்கள் நேரில் சென்று பால் கொடுத்தனர். குவிந்து கிடந்த குப்பைகளை அகற்றும் பணியில் ஒரு குழுவினர் மும்முரமாக ஈடுபட்டனர்.

தமிழ்நாட்டு இளைஞர்களை ஏமாற்றாமல் அவர்கள் கேட்கும் நியாயமான உரிமையை செய்ய வேண்டிய தார்மீகக் கடமையும் பொறுப்பும் அரசுகளுக்கு உள்ளது. எனவே அடுத்து மத்திய – மாநில அரசுகள் என்ன செய்யப்போகின்றன என்ற எதிர்பார்ப்பு உலகத் தமிழர்கள் மனதில் கேள்விக்குறியாக எழுந்துள்ளது.

கடந்த ஒரு வாரமாக தமிழக இளைஞர்கள் பட்ட பாடுக்கு பலன் கிடைக்க வேண்டும். ஆட்சியாளர்கள் கையில்தான் அது உள்ளது.